பேரறிவாளன் உள்பட 7பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இதற்கிடையே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி தாம் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தெரிவித்திருந்தார்.
அதனால் இந்த வழக்கில் தமக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 21-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோரர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது.