​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒற்றுமையைக் காக்க உறுதியேற்போம்.. பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்..!

Published : Feb 04, 2021 5:16 PM

ஒற்றுமையைக் காக்க உறுதியேற்போம்.. பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்..!

Feb 04, 2021 5:16 PM

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் காந்தியடிகள் 1922ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, உத்தரப்பிரதேசத்தின் சவுரிசவுராவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல்நிலையத்தைத் தீவைத்துக் கொளுத்தினர். இதில் விவசாயிகள் மூவரும், காவல்துறையினர் 23 பேரும் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார். வேளாண்மையை லாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்ற அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் அடிப்படையாகத் திகழ்பவர்கள் விவசாயிகள் என்றும், சவுரி சவுரா நிகழ்வில் விவசாயிகளின் பங்கு மிகப்பெரியது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொரோனா சூழலிலும் விவசாயிகள் அதிக அளவு தானிய விளைச்சல் கண்டு சாதனை படைத்ததை நினைவுகூர்ந்தார். பட்ஜெட்டில் எளிய மனிதரைப் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்படவில்லை என்றும், நலவாழ்வு, உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.