குடிப்பியா... குடிப்பியா என்று கேட்டு குடிநோயாளிகளை அடிப்பதாக புகார்... ராணிப்பேட்டை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் பலி!
Published : Feb 04, 2021 12:12 PM
குடிப்பியா... குடிப்பியா என்று கேட்டு குடிநோயாளிகளை அடிப்பதாக புகார்... ராணிப்பேட்டை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் பலி!
Feb 04, 2021 12:12 PM
ராணிப்பேட்டை அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அடுத்த மாணிக்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. நகரின் துணைத் தலைவராகப் பதவிவகித்து வந்த மணிக்கு, ஆரவல்லி என்ற மனைவியும் சரவணன் என்ற மகனும் உண்டு. மகன் சரவணன் அதே பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை கடை ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே, இவருக்குக் குடிப்பழக்கம் இருந்துவந்தது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சரவணனிற்கும், ஏ. சேரிப் பகுதியைச் சேர்ந்த சுகுந்தரா தேவி என்பவருக்கும் திருமணமானது. திருமணமான பின்பும், தொடர்ந்து சரவணன் மது குடித்து வந்தார். இதனால், சுகுந்தரா தேவியும், சரவணனின் பெற்றோரும், சீயோன் நகர் பகுதியிலுள்ள நியூ லைஃப் ஹோம் என்ற தனியார் மறுவாழ்வு மையத்தில் சரவணனைச் சிகிச்சைக்காக சேர்த்தனர். கணவன் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவார் , வாழ்வில் வசந்தகாலம் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த சுகுந்தரா தேவிக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது.
திடீரென்று சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகுந்தரா தேவிக்கு, நியூ லைஃப் ஹோம் மையத்திலிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. உடனடியாக, சுகுந்தரா தேவியும் சரவணனின் பெற்றோரும், பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் ஓடினர். ஆனால், இவர்கள் செல்லும் முன்னரே சரவணன் இறந்து போய் விட்டார்.
இதை தொடர்ந்து, சரவணனின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், நியூ லைஃப் ஹோமில் சரவணன் அடித்துக்கொல்லப்பட்டதாகவும் கூறி, சரவணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.மேலும், சரவணனின் உறவினர்கள் சிலர் , நியூ லைஃப் ஹோம் மறுவாழ்வு மையத்தைச் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ராணிப்பேட்டை காவல்துறையினர், சரவணனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்ல. தொடர்ந்து, சரவணனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர், சரவணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், நியூ லைஃப் ஹோமில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படும் நோயாளிகளை, ஊழியர்கள் சிலர் குடிப்பியா, குடிப்பியா என்று கேட்டு அடித்துத் துன்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிகிச்சை பெற்றுவரும் பல நோயாளிகளின் உடம்பில் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை காவல்துறையினர், நியூ லைஃப் ஹோமை நடத்தி வரும் கிரண் மற்றும் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.