காஞ்சிபுரம் கல்குவாரியில் கோர விபத்து -தொழிலாளர்கள் பலியான சோகம்
Published : Feb 04, 2021 12:00 PM
காஞ்சிபுரம் கல்குவாரியில் கோர விபத்து -தொழிலாளர்கள் பலியான சோகம்
Feb 04, 2021 12:00 PM
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 15-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான மேலும் 3 பேரை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் பகுதியில் சென்னையை சேர்ந்த முத்து என்பவருக்கு சொந்தமான ஆறுபடை என்ற கல்குவாரி இயங்கி வந்தது. இங்கு வழக்கம்போல் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பாறைகளை வெட்டி எடுத்த போது, எதிர்பாராத விதமாக பாறைகள் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
உடனடியாக மீட்பு பணிகள் துவங்கிய போதும், வாகனங்களின் அதிர்வு காரணமாக மண்ணும், பாறைகளும் தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்ததால், மீட்பு பணிகளில் சற்று சிரமம் ஏற்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 15-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மாயமான 3 பேரை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தின் போது பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 லாரிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டன. அவற்றை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார், மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் 44 பேர் கொண்ட மீட்பு குழு மீட்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குவாரி மேலாளரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதாலும், மீட்பு பணியின் போது மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு மீட்பு பணியை தொடங்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.