பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானத்தில் வட்டமடித்து சாகச காட்சிகளை நடத்தின.
ஏரோ இந்தியா விமான கண்காட்சியை பெங்களூரு ஏலஹங்கா விமானப்படைத் தளத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி வைத்தார். நாளை முடிவடைய உள்ள இந்த 3 நாள் கண்காட்சியின் இரண்டாம் நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து பல்வேறு சாகச காட்சிகளை நடத்தி அங்கு திரண்டிருந்த மக்களை சிலிர்க்க வைத்தன..
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்த விமான கண்காட்சியை நடத்துகிறது. இப்போது நடப்பது 13 ஆவது ஏரோ இந்தியா கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் ஏரோஸ்பேஸ் மற்றும் வான்வழி பாதுகாப்பு தொழிற்துறையினர் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் இந்த கண்காட்சி உதவியாக உள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சியில் பல்நோக்கு பயனுடையதும் மிகவும் சிறிதானதும், எடை குறைந்ததுமான சூப்பர்சோனிக் தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களும் அதன் பல்வேறு மாடல்களும் இடம் பெற்றுள்ளன.