ஓட்டு போட்டா வீட்டுக்கு ஒரு ஆக்டிவா பிளஸ், மட்டன் பிரியாணி...! இது வேறமாறி தேர்தல்
Published : Feb 04, 2021 11:19 AM
ஓட்டு போட்டா வீட்டுக்கு ஒரு ஆக்டிவா பிளஸ், மட்டன் பிரியாணி...! இது வேறமாறி தேர்தல்
Feb 04, 2021 11:19 AM
சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டு வேட்டி-சேலை, தையல் எந்திரங்கள் வழங்குவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து நெல்லை டயோசிசன் தேர்தலுக்கான வாக்கு வேட்டை நடந்து வருகிறது. மாதம் ஒரு முறை மட்டன் பிரியாணி வழங்குவது உள்ளிட்ட இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளித்த வேட்பாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்திற்குட்பட்ட ஊர்களில் இருந்து பெருமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 7ஆம் தேதி நடக்கிறது.
திருநெல்வேலி திருமண்டலத்தில் சேகரமாக பிரிக்கப்பட்டுள்ள 115 ஊர்களில் டயோசீசனுக்கு 140 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் திருநெல்வேலி திருமண்டலத்தில் லே செகரட்டரி, கல்வி நிலவரக் குழு செயலாளர், பொருளாளர், உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த சபையின் கட்டுப்பாட்டில் 500 தேவாலயங்களும், 120 டிடிடிஏ பள்ளிகளும், 10 கல்லூரிகளும் ஒரு பொறியியல் கல்லூரியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றும் உள்ளன.
இந்த தேர்தலில் வேதநாயகம் அணி, டி எஸ் ஜெயசிங் அணி என என இரு அணிகள் போட்டியிடுகின்றன. இவை தவிர்த்து சிவந்திப்பட்டி சபைக்கு, கொங்கந்தான்பாறை ஊரில் உள்ள உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாகப் போட்டியிடும் இருவர் சட்டமன்ற தேர்தலை விஞ்சும் விதமாக வாக்காளர்களை கவர்வதற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர்.
தங்கள் வெற்றி பெற்றால் கொங்கந்தான் பாறை சேகரத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுக்கு ஒரு ஹோண்டா ஆக்டிவா வாகனம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்து அதிரவைத்துள்ளனர்.
பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு, 18 வயது முதல் 120 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகை தினங்களுக்கு இரண்டு பட்டு புடவை இலவசமாக வழங்கப்படும் என கூறி பெண் வாக்காளர்களை கவர்ந்துள்ளனர்.
அதே போல ஆண்களுக்கு இரண்டு பட்டு வேஷ்டி சட்டை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதோடு பெண்கள் சுயதொழில் தொடங்கும் விதமாக தையல் மிஷின் இலவசமாக வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளனர்.
தங்களது வாக்குறுதிகளை அச்சிட்டு வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ள இவர்களிடம் வீட்டுக்கொரு ஆக்டிவா பைக் வழங்க பணம் எங்கிருந்து வரும் என்று ? கேள்வி எழுப்பினால் தங்கள் திருமண்டலத்தில் கீழ் உள்ள தேவாலயங்களின் குறைந்த பட்சம் தசமபாதம் மூலம் மட்டும் மாத வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் வருவதாகவும், தங்கள் சபையின் கட்டுப்பாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களின் நடக்கின்ற ஆசிரியர் இடமாறுதல் மூலம் கிடைக்கின்ற லட்சக்கணக்கான நிதி போன்றவற்றை எடுத்து சபை மக்களுக்கு கொடுப்போம் என்று தெரிவிக்கின்றனர்.
சபையில் முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிருகின்ற அணிகள் இரண்டும் அடக்கி வாசிக்க, பிரபலமாகும் ஆசையில் இந்த இரு சுயேட்சை உறுப்பினர்களும் மக்களிடம் ஆக்டிவா வாகன ஆசையை காட்டி மோசம் செய்வதாக என்று எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மொத்தத்தில், தேர்தல் கால வாக்குறுதிகள் எல்லாம் ஓடுகிற நீரில் எழுதுகின்ற எழுத்து போல ஆகிவிடாமல் இருந்தால் சரி..!