காருண்யா நகர் பெயரை நல்லூர்வயல் என்று மாற்ற கோரி மக்கள் போராட்டம்!
Published : Feb 04, 2021 10:27 AM
சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே அழிந்தது போல கோவை நல்லூர்வயல் என்ற கிராமமே காணமல் போனதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத போதகர் பால் தினகரன் நடத்தி வரும் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஜெபம் நடத்தும் பிரமாண்ட கட்டடம் ஆகியவை கோவை அருகேயுள்ள காருண்யா நகரில் இயங்கி வருகின்றன. எப்போதும், அருமையான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதி இது. காருண்யா நகரை தாண்டி சென்றால், கோவை குற்றாலம் அருவியும் உள்ளது.
இந்த நிலையில், நல்லூர் வயல் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் பெயரை காருண்யா நகர் என்றும் நல்லூர் நகர் தபால் நிலையத்தை காருண்யா நகர் தபால் நிலையம் என்று மாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போல, போலீஸ் நிலையம் ,டெலி போன் எக்சேஞ்ச் போன்றவையும் காருண்யா நகர் என்ற பெயருக்கு மாற்றப்பட்டது.
'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் நிறுவனர் டி.ஜி.எஸ் . தினகரன் அவரின் மகன் பால் தினகரன் ஆகியோர் தங்கள் செல்வாக்கு காரணமாக நல்லூர்வயல் என்ற கிராமத்தை காருண்யா நகர் என்று பெயரில் மாற்றியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, இயேசு அழைக்கிறார் அமைப்புக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றதால், காருண்யா நகர் என்ற பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்ற கோரி போராட்டம் வெடித்துள்ளது.
இதற்காக , நல்லூர் வயல் மீட்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆலாந்துறையில் பேரணியாக செல்ல அனுமதி கேட்டிருந்தனர். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும் ,பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் அங்கு லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து , பேரணி சென்ற சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு கெசட்டில் உள்ளது போல மீண்டும் நல்லூர் வயல் பெயரையே வைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.