மக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..! கஞ்சா படுத்தும் பாடு
Published : Jan 21, 2021 9:46 PM
மக்களை விரட்டி விரட்டி கடித்து ரத்தம் குடித்த ஒண்டிப்புலி..! கஞ்சா படுத்தும் பாடு
Jan 21, 2021 9:46 PM
நாமக்கல் மாவட்டம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டியில் சாலையில் போவோர் வருவோரை எல்லாம் பிடித்து கடித்து ரத்தம் குடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒண்டியாக புலி போல ஊருக்குள் வலம் வந்த கஞ்சா போதை ஆசாமியின் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மனோகரா பட நாயகன் போல அழைத்து வரவில்லை, கயிறு கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் என்று ரத்தம்வழிய காட்சி அளிக்கும் இவன் தான் போவோர் வருவோரை எல்லாம் கடித்து ரத்தம் குடித்த கஞ்சா குடிக்கி கண்ணன்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்22 வயதான இவருக்கு பல ஆண்டுகளாக கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்ததால் போதை தலைக்கு ஏறிய நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களை எல்லாம் விரட்டி பிடித்துக் கடித்து ஒண்டிப் புலி போல ரத்தம் குடித்தான்.
இதில் 5க்கும் மேற்பட்டோருக்கு ரத்தகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், உடலெல்லாம் ரத்தம் வடிய வெறி கொண்டு சுற்றிய ஒண்டிப்புலி கண்ணனை அங்குள்ள இளைஞர்கள் மடக்கிப்பிடித்து கயிற்றால் கட்டி, மினி சரக்கு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர், இல்லை இல்லை இழுத்து சென்றனர்.
அவன் மீது இரக்கப்பட்டு ஒருவர் தண்ணீர் கொடுக்க, தன் கைகளை அவிழ்த்து விடுங்கள் தான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கத்தினான்.
அவனது அட்டகாசம் தெரிந்து யாரும் அவனை அவிழ்த்து விட முன்வராத நிலையில் தமிழ் சினிமாவின் சிக்ஸ் பேக் ஹீரோக்கள் போல எலும்பும் தோலுமாக இருந்த தனது உடலை கட்ஸ் எப்படி இருக்கு என்று கேட்டபடியே ஒரே அடியில் ஒருத்தனை தூக்கிருவேன்னு பஞ்ச் அடித்து கூடி நின்றவர்களை பயமுறுத்தியது அந்த ஒண்டிப்புலி.
தான் வைத்திருந்த 1 லட்சம் காணாமல் போனதால் தான் கஞ்சா அடித்தாகவும்,தனக்கு சுதந்திரம் தேவை, என்று கூச்சலிட்ட கண்ணன், தனது மயிண்டை பிளாக் செய்து வைத்து விட்டதாக கதை அளந்தான்.
ஒரு கட்டத்தில் யாரும் கண்ணில் பட்டுவிடாதீர்கள் அவ்வளவுதான் என மிரட்ட தொடங்கியவுடன் மருத்துவமனை வளாகத்தில் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவர்களும் மருத்துவர்களும் அச்சத்தால் உறைந்து போயினர்.
அவனை கயிறு கட்டி கூட்டி வந்தவர்களே மருத்துவமனைக்குள் தூக்கி சென்று கை கால்களை கட்டிலுடன் கட்டிபோட்டனர்.
மருத்துவர்கள் ஒரு வித அச்சத்துடன் அவனுக்கு மயக்க ஊசி செலுத்தினர். கஞ்சா ஆசாமியின் இந்த சேட்டையால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழகத்தில் போதை பொடுள் தடுப்பு பிரிவு என்று மத்தியிலும் , மாநிலத்திலும் தனி தனி சிறப்பு பிரிவுகள் இருந்தாலும் அங்குள்ளவர்கள் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
எனவே சிறப்பு சோதனைகள் நடத்தி கஞ்சாவை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தவறினால் இன்னும் பல இளைஞர்கள் சீரழிவதோடு இது போன்ற விபரீத சம்பவங்கள் ஊர் தோறும் அரங்கேற வழிவக்கும் ஆபத்து உள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதே நேரத்தில் போதை ஒரு மனிதனை விலங்கினும் கீழாய் தள்ளிவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.