​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்த ஆள்மாறாட்டம்.. 2வது பரிசு வென்ற வீரர் குற்றச்சாட்டு

Published : Jan 21, 2021 7:50 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகுந்த ஆள்மாறாட்டம்.. 2வது பரிசு வென்ற வீரர் குற்றச்சாட்டு

Jan 21, 2021 7:50 PM

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள் மாறட்டம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக, 2 ம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்களிடம் ஏறு தழுவுதல் போட்டி நடைபெற்று வந்தது. ஆயர் குல வாலிபர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவருக்கு ஆயர் குல பெண் மாலை சூட்டுவாள்.

இவ்வாறு வீரத்தின் அடையாளமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி பண்டைய காலத்திலிருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. காலை 9 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5மணி வரை 8 சுற்றுக்களாக நடந்தது. இதில் 719 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டியில் 12 காளைகளை பிடித்த மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் ஒரு கார் பரிசளிக்கப்பட்டது. 2வது இடம்பிடித்த கருப்பண்ணன் என்ற மாடுபிடி வீரருக்கு இரு கன்றுகளுடன் கூடிய நாட்டு காளை மாடும், மூன்றாவது இடம் பிடித்த சக்தி என்பவருக்கு பரிசாக தங்க காசும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் வழங்கப்பட்ட முதல் பரிசில் மோசடி நடைபெற்று உள்ளதாகவும், ஒரே பதிவு எண்ணில் 2 பேர் ஜல்லிகட்டில் பங்கேற்று முதல் பரிசை வாங்கி உள்ளதாகவும் அதே ஜல்லிக்கட்டு போட்டியில் இடம்பெற்று 2 ஆம் இடத்தை பிடித்த கருப்பண்ணன் என்கிற மாடுபிடி வீரர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இது குறித்து மாடுபிடி வீரர் கருப்பண்ணன், "முதல் சுற்றிலிருந்து மூன்றாம் சுற்று வரை பங்கேற்ற ஹரிகிருஷ்ணன் என்கிற மாடுபிடி வீரர், 5 காளைகளை பிடித்து முன்னிலை வகித்த பொழுது 3 ஆம் சுற்றில் காயம் அடைந்தார். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் தனது 33 எண் கொண்ட பனியனை மற்றொரு பதிவு செய்யப்படாத மாடுபிடி வீரரான கண்ணனிடம் கொடுத்ததாகவும், கண்ணன் 8 காளைகளை பிடித்ததால் இரண்டு பேரும் காளைகளை அடக்கியதை கணக்கில் கொண்டு முதல் பரிசு வழங்கி உள்ளனர்" என குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து புகாரில், வீரத்துக்காகவும், நேர்மைக்காகவும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது அதில் பங்கேற்கும் வீரர்களின் உத்வேகத்தை குறைப்பதாக இருக்கும். எனவே இந்த முறைகேடு குறித்து சரியான முறையில் விசாரித்து முதல் பரிசை கருப்பண்ணனுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர் கருப்பண்ணனிடம் புகாரினைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து முறையான விசாரணை நடைபெறும் என்று உறுதியளித்துள்ளார்.