​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதல் நாளிலேயே 17 உத்தரவு... பணியை தொடங்கினார் ஜோ பைடன்

Published : Jan 21, 2021 6:52 PM

முதல் நாளிலேயே 17 உத்தரவு... பணியை தொடங்கினார் ஜோ பைடன்

Jan 21, 2021 6:52 PM

மெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். 17 புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள அவர், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணையுமென அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கி உள்ளார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 17 முக்கிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார் .  இதில் கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அமெரிக்க மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டார்.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும்  அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை பெறுவதை  எளிதாக்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.