கேரளாவில் பட்டினி போட்ட மகனால் முதியவர் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் அருகே முண்டகாயம் என்ற இடத்தை சேர்ந்தவர் பொடியன் (வயது 80 )- அம்மினி தம்பதி . இவர்கள், தங்கள் இளைய மகன் ரெஜி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ரெஜி தன் பெற்றோரை கொடுமைப்படுத்தி வந்தார். சரியாக உணவு கொடுக்காமல் அவர்களை பட்டினி போட்டுள்ளார்.
பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்கள் வெளியே வராமல் செய்துள்ளார். நாய்க்கு பயந்து அந்த முதியவர்கள் அறையை விட்டு வெளியே வராமல் தவித்துள்ளனர். பெற்றோரை ரெஜி கொடுமைப்படுத்துவது அக்கம் பக்கத்தினருக்கு தெரியும். இதனால், வீட்டிலிருந்த பின்பக்க ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்தினர் அந்த முதியவர்களுக்கு உணவு கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரெஜியின் கொடுமையை கண்டு பொறுக்க முடியாத பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
(picture courtesy: mathrubhumi.com)
உடனடியாக , ரெஜியின் வீட்டுக்கு சென்று போலீஸ் அதிகாரிகள் பார்த்த போது, உள்ளே ஒரு கட்டிலில் பொடியன் ஒட்டிய வயிற்றுடன் கிடந்துள்ளார். அம்மினி மன நிலை பாதிக்கப்பட்டவர் போல சேரில் இருந்துள்ளார். ஆங்காங்கே பொருள்கள் சிதறி கிடந்தன. இந்த காட்சியை கண்டு அதிர்ந்த அதிகாரிகள் உடனடியாக அந்த முதியவர்களை மீட்டு கஞ்சிரப்பள்ளி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அதிகாரிகளித்தில் மெல்ல மெல்ல பேசிய பொடியன், தங்கள் மகன் ரெஜின் சாப்பிட எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக வாக்குமூலமும் அளித்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும் பொடியன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். பொடியன் பசியால் இறந்தததாக உடற் கூறு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெற்றோரை பட்டினி போட்டு கொன்ற மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.