கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.
முதல் கட்டத்தில், மருத்துவத்துறையினரை உள்ளடக்கி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 2ஆம் கட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ரத்தஅழுத்தம், சர்க்கரை போன்ற கூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்தில் பிரதமருக்கும், அனைத்து மாநில முதலமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் பிரதிநிதிகளை முன்களப் பணியாளர்களாகக் கருதி தடுப்பூசி போடவேண்டும் என சில மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில், சுகாதாரத்துறையினருக்கு முன்னுரிமை என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.