வியப்பில் ஆழ்த்தும் விண்வெளி வேளாண்மை..செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு
Published : Jan 21, 2021 11:02 AM
வியப்பில் ஆழ்த்தும் விண்வெளி வேளாண்மை..செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு
Jan 21, 2021 11:02 AM
நிலா சோறு சாப்பிட்ட காலம் மாறி, நிலவில் சோறு சாப்பிட முடியுமா என்று ஆராய்ச்சி நடத்தும் அளவிற்கு மனித இனம் முன்னேறியுள்ளது.
அந்த வரிசையில், விண்வெளி வேளாண்மை என்பது இன்றும் பெரும் அளவில் விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு தான். பூமியில் விவசாயம் செய்வதே பெரிய சவாலாக இருக்கிறது. பருவநிலை மாற்றங்களால் பருவ மழை பொய்த்து வருகிறது, நிலத்தடி நீரும் வரண்டுகொண்டிருக்கிறது.இந்த சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி, பயிர்கள் உயிர்பெறும் போது இயற்கை சீற்றங்களால் சேதம் அடைந்து வருகின்றன. பூமியில் பயிர் செய்யும்போதே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, மற்ற கிரகங்களில் விவசாயம் சாத்தியம் தானா என்று கேள்வி எழுகிறது.
இந்த கேள்விகளும் சந்தேகங்களும் ஒரு புறம் இருக்க, பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமான செவ்வாய்க்கிரகத்தில் வேளாண்மை செய்ய வாய்ப்புகள் உள்ளதா என்று விஞ்ஞானிகள் சில வருடங்களாகவே ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பூமியின் நிலப்பரப்பு எப்படி மண் கொண்டு மூடப்பட்டுள்ளதோ, செவ்வாய்க்கிரகத்தின் மேற்பகுதியும் , தூசி மற்றும் உடைந்த பாறைகளால் மூடப்பட்டுள்ளது .இது ரெகோலித் என்று அழைக்கப்படும். கால்சியம், பொட்டாசியம் , மெக்னீசியம் மற்றும் ஐயன் போன்ற பல வகை ஊட்டச்சத்துக்கள் ரெகோலிதில் உண்டு . இந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டு , செவ்வாய்க்கிரகத்தில் பயிர்கள் வளரமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் ரெகோலிதில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்து இன்னும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர்.
மேலும், பயிருக்கு உயிர்கொடுப்பது தண்ணீர் தான். செவ்வாய்க்கிரகத்தின் மேல் பரப்பில் அதிகளவிலான நீரும், கார்பன் டை ஆக்சைடும் உறைந்த நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கனவுகள் எதார்த்தமாக இருக்க வேண்டியது இல்லை என்று சொல்லுவார்கள் . அதற்கு உதாரணமாக ,உலகத்தின் நம்பர் 1 பணக்காரரும் மிக பிரபலாமான தொழிலதிபருமான எலோன் மஸ்க், செவ்வாய்க்கிரகத்தில் நகரம் ஒன்றை தாம் அமைக்கவிருப்பதாக கூறினார். விண்கல் தாக்கியோ அல்லது அணுசக்தி போரினாலோ, பூமியில் வாழ இயலாது போகும் சூழலில் , மனித இனம் வாழ்வதற்கேற்ப ஒரு இடம் வேண்டும் என்றும் அதற்காக செவ்வாய்க்கிரகத்தில் ஒரு நகரம் அமைக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.