ஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..! ரூ.35 லட்சம் புகையான சோகம்
Published : Jan 21, 2021 4:35 AM
ஒர்க் ப்ரம் ரம்மி மோசடி வழக்கில் ஐ.டி. ஊழியர் லாக்..! ரூ.35 லட்சம் புகையான சோகம்
Jan 21, 2021 4:35 AM
சென்னை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஒர்க்-ஃப்ரம்-ஹோம் என்று பணியாற்றி வந்த மென் பொறியாளர் ஒருவர், 35 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் தொலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரம்மிக்கு அடிமையானதால் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த மேரிலதா என்பவர், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் மற்றும் தனக்கு லோன் வாங்கி தருவதாகவும் கூறி ஆன்லைனில் 24 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து, சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரிந்தபோது ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார்.
பணம் அதிகம் தேவைப்பட்டதால் தனது செல்போன் எண்ணை ஆன்லைனில் பதிவுசெய்து சாப்டவேர் வேலை வாங்கித் தருவதாகப் பதிவிட்டுள்ளார். இதனை நம்பி அவருடன் பேசிய மேரி லதா ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளார். அதன் பின்பு சந்தோஷ் இறந்துவிட்டதாகக் கூறி அவரது நண்பர் கார்த்திக் என்பவர் பேசுவதாகக் கூறி மேலும் பணத்தை கறந்துள்ளார்.
பின்னர் கார்த்திக் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தான் வேலை மற்றும் லோன் வாங்கி தருவதாகவும் பேசி சுமார் 24 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
சாப்ட்வேர் என்ஜினீயரான சந்தோஷ் குமார் தனக்கு வரும் சம்பள பணத்துடன், வீடுகளுக்கு அதிகாலையில் பால் பாக்கெட் போடுவது, உணவு டெலிவரி செய்வது போன்ற பகுதிநேர வேலைகளைச் செய்து கிடைத்த வருமானம் என இதுவரை 35 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றிய சந்தோஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, தனது ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்த சந்தோஷ்குமார், மோசடியில் ஈடுபட்டதால் சிறைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.