லேப்டாப்பில் மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!- இளைஞர் தலைமறைவு
Published : Jan 20, 2021 5:15 PM
லேப்டாப்பில் மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!- இளைஞர் தலைமறைவு
Jan 20, 2021 5:15 PM
சென்னையில் சிறுமிக்கு லேப்டாப்பில் மாஸ்டர் படம் காண்பிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடந்த 17-ம் தேதி தனது மனைவியுடன் கோயம்பேடு ரோகினி தியேட்டருக்கு "மாஸ்டர்" படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருக்கும் தன் தாயை பார்த்து கொள்ள 13 வயதான மகளை துணையாக இருக்க கூறியுள்ளார். மாஸ்டர் படம் பார்க்க தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிறுமி அடம் பிடித்துள்ளார். ஆனால், பெற்றோர் மட்டுமே படத்துக்கு சென்றனர்.
பாட்டியுடன் இருந்த சிறுமிக்கு, ஏற்கனவே பழக்கமான அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான வினோத் என்பவன் செல்போனில் சிறுமியிடம் பேசியுள்ளான். பெற்றோர் தன்னை விட்டு விட்டு மாஸ்டர் படம் பார்க்க சென்றுவிட்டதாக கூறி சிறுமி அவனிடத்தில் வருந்தியுள்ளார். சிறுமியின் ஏக்கத்தை பயன்படுத்திக் கொண்ட வினோத், தன் லேப்டாப்பில் மாஸ்டர் படம் இருப்பதாகவும் வீட்டுக்கு வந்தால் இருவரும் சேர்ந்து படம் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். தன் பாட்டியிடம் தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், சிறுமி வீட்டில் இல்லாததை கண்டு தேடினர். மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, மாஸ்டர் படம் காண்பிப்பதாக அழைத்த வினோத் தன் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். இதையடுத்து, வினோத் தலைமறைவாகி விட்டான். தலைமறைவான வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.