கோடிக் கணக்கானோரின் இதயங்களில் நம்பிக்கை தீபத்தை ஏற்றிய தியாகச் சுடர்..!
Published : Jan 19, 2021 1:47 PM
கோடிக் கணக்கானோரின் இதயங்களில் நம்பிக்கை தீபத்தை ஏற்றிய தியாகச் சுடர்..!
Jan 19, 2021 1:47 PM
"கருணையுள்ளமே கடவுள் வாழும் இல்லம்" என்பதை உலகுக்கு உணர்த்திய, புற்றுநோய் சிகிச்சைத் துறையில் இந்தியாவின் மூத்த மருத்துவர் சாந்தா காலமானார். கோடிக்கணக்கானோரின் இதயங்களில் நம்பிக்கை எனும் தீபத்தை ஏற்றிய அந்த சுடரின் தியாக வாழ்வு குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயரச் செய்த சர்.சி.வி.ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர் எனும் இருபெரும் இயற்பியல் விஞ்ஞானிகளின் குடும்பத்தில், சென்னை மயிலாப்பூரில் 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்தவர் சாந்தா.
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்த சாந்தா, மகப்பேறு இயல் மருத்துவத்தில் எம்.டி. படிப்பை முடித்த வேளையில்தான், மங்காப்புகழ் பெற்ற மற்றொரு பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்.
பெண் மருத்துவர்கள் மகப்பேறுஇயல் மருத்துவத்தை தேர்வு செய்யும் அந்த காலத்தில், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, புற்றுநோய் சிகிச்சை துறையை தேர்வு செய்தார், சாந்தா.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சென்னை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்த போதிலும், அதை உதறித் தள்ளி, பெயருக்கு கவுரவ ஊதியத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். உள்ளத்தில் அன்று அவர் ஏற்றிய ஒளிதான், கோடிக் கணக்கானோரின் இதயங்களில் நம்பிக்கை எனும் சுடரை ஏற்றியது.
12 படுக்கைகள் மட்டுமே கொண்ட, பெரிய வசதிகள் ஏதுமில்லாத, ஒற்றைக் கட்டிடத்தில் இயங்கிய அந்த மருத்துவமனையில், இரண்டே டாக்டர்கள்தான். அதில் ஒருவரான சாந்தா, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி, தன் வாழ்வையே அதன் மேம்பாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.
ஒரு எளிய மருத்துவமனையை, உலகப்புகழ் பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றிய பெருமை மருத்துவர் சாந்தாவையே சேரும். அன்பு, கருணை, அரவணைப்புடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, லாபநோக்கற்ற மருத்துவ மையமாக அதை வளர்த்தெடுத்தார். புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் உலக சாதனை படைத்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றினார். மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள புற்றுநோயை கட்டுப்படுத்துவதே தனது வாழ்வின் லட்சியமாக மாற்றிக் கொண்டார்.
உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்.
வாய்ப்பும், வசதியும் உள்ளவர்களுக்கு எத்தனையோ மருத்துவமனைகள் இருக்க, ஏழைஎளிய மக்கள், நலிந்தோர் நம்பிக்கையுடன் நாடிச் செல்லும் ஆலயமாக அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் உருவானதற்கு டாக்டர் சாந்தாவே காரணம்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்தார்.
கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவருக்கு உயரிய விருதுகளான மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த தியாகச் சுடர் அணைந்தாலும், அவர் ஏற்றி வைத்த தன்னலமற்ற மருத்துவசேவை என்ற தீபம் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் வடிவில் என்றென்றும் எளியவர்களுக்கு நம்பிக்கை ஒளிகொடுக்கும்.