ஜப்பான் சென்றடைந்த இந்திய மாலுமிகள் குழு..7 மாதங்கள் பின் இந்தியா திரும்ப ஏற்பாடு
Published : Jan 19, 2021 11:49 AM
ஜப்பான் சென்றடைந்த இந்திய மாலுமிகள் குழு..7 மாதங்கள் பின் இந்தியா திரும்ப ஏற்பாடு
Jan 19, 2021 11:49 AM
ஆஸ்திரேலியா நிலக்கரியை ஏத்திச்சென்று சீன துறைமுகம் அருகே சிக்கி தவிக்கும் எம்.வி ஜக் ஆனந்த் (M .V . Jag Anand ) என்ற இந்திய கப்பல் அதன் 23 இந்திய குழுவினருடன் , குழு மாற்றத்திற்காக ஜப்பான் துறைமுகம் சென்றடைந்தது.
2018 முதல் சீனா ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான உறவில் சிக்கல் நிலவி வருகிறது. சீனாவின் பிரபல டெக் நிறுவனமான ஹவாய் டெக்னாலஜியின் 5ஜி நெட்வொர்கிற்கு ஆஸ்திரேலியா தடை விதித்தது. மேலும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சீனா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாடுகளை போல ஆஸ்திரேலியாவும் வலியுறுத்தி வந்தது.
இதனை தொடர்ந்து , அமெரிக்காவின் கைப்பாவையாக ஆஸ்திரேலியா செயல்படுவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மீது சீனா பல இறக்குமதி தடையை விதித்தது. ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி மற்றும் நிலக்கரி போன்ற பொருட்கள் மீது சீனா இறக்குமதி தடை விதித்தது.
இதனால் ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி ஏந்திச்சென்ற எம்.வி ஜக் ஆனந்த் என்ற இந்திய கப்பல் சீன துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் குழு மாற்றத்திற்கும் சீனா தடைவிதித்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்த கப்பல் சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, சீனாவுடன் மேற்கொண்ட பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, எம்.வி ஜக் ஆனந்த் கப்பல் ஜப்பான் துறைமுகம் சிபாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனைக்கு பின் அந்த 23 மாலுமிகளை கொண்ட குழு அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய வந்தடையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
எம்.வி ஜக் ஆனந்த் கப்பல் போல மேலும் 50 கப்பல்கள், சீன துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் கடலில் சிக்கி தவிப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் காஃபீடியன்(Caofeidian ) துறைமுகம் அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிக்கி கொண்டிருக்கும் எம். வி அனஸ்தேசியா(M.V anastasia ) என்ற இந்திய கப்பலில் இருக்கும் 16 இந்திய மாலுமிகளை மீட்க இந்தியா தொடர்ந்த முயற்சிசெய்து வருகிறது.