டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார். தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் குறித்து பேசுவதுடன், திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், புயல் சேதங்களுக்காக தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய நிதியுதவிகள் தொடர்பான கோரிக்கை மனுவை முதலமைச்சர் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை மற்றும் பவானி கால்வாய் சீரமைப்பு திட்டங்கள், நெய்வேலி என்.எல்.சி. 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம்- தூத்துக்குடி எரிவாயுக் குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் படி அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமரிடம் நேரில் வழங்குவதுடன், கொரோனா தடுப்பூசி திட்டம் போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார். தமிழகத்திட்டங்கள் குறித்தும், அரசியல் ரீதியாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.