'விமானத்துல ஏறினா கொரோனா வந்துடும்' - பதறிப்போய் பதுங்கிய இந்தியர் கைது!
Published : Jan 18, 2021 7:39 PM
கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தில், அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் மறைந்து வாழ்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 36 வயதாகும் ஆதித்யா சிங், விருந்தோம்பலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஜ்ஸ், ஆரஞ்சில் (( Orange )) நண்பர்களின் அறைகளில் தங்கி வசித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 19 - ம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் இருந்து சிகாகோவில் உள்ள ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அதன் பிறகு விமானத்தில் பறந்தால் கொரொனா நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்துவிடுவோமோ எனும் பயத்தில் அங்கேயே தங்கிவிட்டார்.
விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தங்கிய ஆதித்யா சிங், செயல்பாட்டு மேலாளர் ((operations manager )) அட்டையைத் திருடி எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த போது யாராவது விசாரித்தால் அடையாள அட்டையைக் காட்டி தப்பியுள்ளார். விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் உண்ணும் உணவைத் தின்று உயிர் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தான் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் இருவர் ஆதித்யா சிங்கின் செயல்பாடு மீது சந்தேகம் அடைந்து அவரை அழைத்து விசாரித்துள்ளனர். அவர் தனது திருடப்பட்ட அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். அந்த அடையாள அட்டையைப் பரிசோதித்த போது அக்டோபர் 26 - ம் தேதி காணாமல் போன அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்குல்த் தகவல் தெரிவித்தனர். விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசமான குற்றங்கள் மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிறகு, ஆதித்யா சிங் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிகாகோ விமானத் துறை, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி, “இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. போலி அடையாள அட்டையுடன் விமான நிலையத்துக்குள் ஒருவர் தங்கியது விமான நிலையத்துக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆதித்யா சிங் ஜாமீன் பெறுவதற்கு 1000 அமெரிக்க டாலர்கள் பிணையத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் பெற்ற பிறகு விமான நிலையத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிறைந்த சர்வதேச விமான நிலையத்துக்குள் ஒருவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.