டெல்லியில் முதலமைச்சர்... பிரதமர், அமைச்சர்களுடன் சந்திப்பு
Published : Jan 18, 2021 6:28 PM
டெல்லிக்கு இரு நாட்கள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பிற்பகலில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழக திட்டங்கள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கும் முதலமைச்சர், செவ்வாய்கிழமை காலை 10:30 மணி அளவில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், புயல் சேதங்களுக்காக தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய நிதியுதவிகள் தொடர்பான கோரிக்கை மனுவை அப்போது முதலமைச்சர் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை மற்றும் பவானி கால்வாய் சீரமைப்பு திட்டங்கள், நெய்வேலி என்.எல்.சி. 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம்- தூத்துக்குடி எரிவாயுக் குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் படி அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை விடுக்கிறார்.