வனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்
Published : Jan 18, 2021 1:36 PM
வனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்
Jan 18, 2021 1:36 PM
உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக, தேனி மாவட்டத்தில் உள்ளூர் அளவில் அரங்கேறிய பன்றி தழுவும் போட்டியில், பன்றிகளின் பின்னங்கால்களை பிடித்து இழுக்க முயன்ற வீரர்களால் களம் அதிர்ந்தது. ஜல்லிக்கட்டு போல வர்ணனையுடன் நடைபெற்ற போட்டிக்கு சங்க கால விளக்கம் அளித்து, நாம் தமிழர் சீமானின் புகைப்படத்துடன் பேனர் வைத்து அசர வைத்த வனவேங்கைகள் குறித்த சுவராஸ்ய தொகுப்பு
இரு தூண்களுக்கு நடுவே வாடி வாசல், கபடி விளையாடும் மைதானம்போல திடல், போட்டிக்கு வர்ணனையாளர், சுற்றிலும் பார்வையாளர்கள் என களைகட்டிய இந்த போட்டி, தேனி அல்லி நகரம் அருகே நடைபெற்றது. வீரர்கள் தயாராக இருக்க வாடிவாசல் வழியாக விரட்டிவிடப்பட்டதோ ஒரு பன்றி. மிரண்டு ஓடிய அந்த பன்றியை, 4 பேர் சேர்ந்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாடிவாசல் வழியாக வெளியேற்றினர்.
பின்னர் ஒரு வெள்ளைப் பன்றியை விரட்டி வந்தனர். அது வீரர்களுக்கு பயந்து வேலிப்பக்கமாக விழுந்து தப்பி ஓடிவிட்டது. அதை மீண்டும் பத்திக் கொண்டு வந்து, பின்னங்கால்களை பிடித்து தரதரவென இழுத்து களமாடினார் ஒரு கட்டிளங்காளை. சுற்றிலும் இருந்த 3 பேர் ஜயகோஷம் எழுப்பி, அவரை தோளில் தூக்கிக் கொண்டாடினர்.
பிறகு குட்டியானையில் ஒரு கருப்பு பன்றியை கொண்டுவந்து விட்டு, வாலையும் காலையும் இழுத்து பார்த்து வீரத்தை பரிசோதித்தனர். ஜல்லிக்கட்டு நிகராக வர்ணனைதான் இந்த போட்டியில் ஹைலைட். பன்றி பிடிபடவில்லை, வீரர் தோற்றதாக அறிவித்தார் வர்ணனையாளர்.
70 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும், மூவர் மட்டுமே களமிறங்கி, மூன்று அடி கோட்டைக் கடந்த பின்னர் பன்றியைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என பல்வேறு விதிகளுடன் போட்டி நடத்தப்பட்டதாக, நிகழ்ச்சியை நடத்திய வனவேங்கைக் கட்சியினர் தெரிவித்தனர். சங்க கால குறிஞ்சி நிலத்தில் விவசாய உழவிற்கு பன்றிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதை நினைவுகூரும் வகையில் பன்றிதழுவும் போட்டி நடத்தப்படுவதாகவும் ஒரு வரலாற்று செய்தியையும் பகிர்ந்து கொண்டனர்.