புதுச்சேரியில், கைவிடப்பட்ட கண்டெய்னர்களை கொண்டு அடுக்கு மாடி உணவகம் ஒன்றை உருவாக்கியுள்ளார் உணவக உரிமையாளர் ஒருவர்.
அகன்ற தூண்கள் ! - உயர்ந்த தளங்கள் ! - விசாலமான ஜன்னல்கள் ! என இந்தோ - பிரெஞ்ச் கட்டிடக் கலையை எடுத்துக் காட்டுகின்றன புதுச்சேரியின் அழகிய பல கட்டிடங்கள்.
வெளிநாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ள கண்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள் போல, புதுச்சேரியில் உள்ள ஆம்பூர் சாலையில் மூன்றடுக்கு கண்டெய்னர் கட்டிடம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
10 அடி நீளம் - 8 அடி அகலம் - 8 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு பெட்டகங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட அடுக்கு மாடி உணவகத்தில், வீணான இரும்புவாளி, கண்ணாடிகள், பலகைகள், நம்பர் பிளேட், கலர் பேப்பர், மூங்கில்கள், குருவிக் கூடுகள், பூக்கூடைகள் என தூக்கி எறியப்படும் பல பொருட்கள் அலங்காரமாகக் காட்சி அளிக்கின்றன.
புதுச்சேரியின் பிரதான ஒயிட் டவுன் பகுதியில், வீணான கண்டெய்னர்கள், நவீன வசதிகளுடன்கூடிய வீடாக மாற்றப்பட்டு நகரும் இல்லம் மற்றும் வியாபார நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி நகராட்சி சார்பில் கடற்கரைசாலை, மருத்துவமனை வெளிபுறச் சாலை மற்றும் செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர்கள் மூலம் குளியலறை மற்றும் கழிவறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு கண்டெய்னரை அழகிய வீடாக மாற்ற குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. 25 லட்சம் ரூபாய் செலவாகும் ஒரு கட்டிடத்தை கண்டெய்னர்கள் மூலம் 10 லட்சம் ரூபாய்க்குள் கட்டி முடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஓட்டுவீடுகள், கூரைவீடுகள் கான்கிரீட் வீடுகளுக்கு மத்தியில் இவற்றிற்கு மாற்றாக கண்டெய்னர் வீடு உருவாவது புதுச்சேரியில் தலைதூக்கி உள்ளது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபிக்கும் வகையில், புதுச்சேரியில் சத்தமில்லாமல் புதுமைகள் அரங்கேறி வருகின்றன.