வேட்டை நாய்க்கு விஷம் கூட்டாளி கொன்று புதைப்பு..! இரு ரவுடிகள் சிக்கினர்

0 4078

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆசையாக வளர்த்த நாயை விஷம் வைத்து கொன்றதற்கு பழிக்கு பழியாக கூட்டாளியை கொன்று புதைத்த ரவுடிகள் இருவர் ஒன்றரை வருடம் கழித்து போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர்.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் உள்ள பூதநாராயணன் கோவில் பூசாரி மல்லையன் என்பவர் கடந்த மாதம் கொல்லப்பட்டார். இந்த வழக்கை இராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். கொலை தொடர்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த ரவுடிகளான அஜித்குமார் , பிரவீன்குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மது போதையில் இருந்த இருவரும், தாங்கள் பூசாரி மல்லையனை கொலை செய்யவில்லை என்றும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கூடலூர் அருகே தங்களது கூட்டாளி மனோஜ் குமார் என்பவரை தான் அடித்து கொலை செய்து புதைத்ததாகவும் உளறினர்.

இதை அடுத்து இருவரையும் கூடலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனோஜ் குமார் கொலைக்கான மர்மம் விலகியது.

ரவுடிகளான அஜீத்குமார் ,பிரவீன்குமார், மனோஜ்குமார் ஆகிய மூவரும் கூட்டாளிகள். எப்போதும் ஒன்றாகவே சுற்றித்திரியும் இவர்கள் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஜீத்குமார் ஆசை ஆசையாக வளர்த்த வேட்டை நாய்க்கு விஷம் வைத்துக் கொன்ற மனோஜ் குமார் அதனை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளான்.
தனது நாயை காணாமல் அஜீத்குமார் தவித்த நிலையில் வேட்டை நாய்க்கு விஷம் வைத்து கொன்றதை குடி போதையில் மனோஜ்குமார் உளறியுள்ளான்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனோஜ்குமாருக்கு அதிக அளவு மது ஊற்றிக் கொடுத்து நாயை கொன்றதற்கு பழிக்கு பழியாக மனோஜ்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் மனோஜ்குமாரின் சடலத்தை அங்குள்ள மேல் நிலைப்பள்ளியின் பின்புற ஓடையில் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடகமாடியுள்ளனர். மனோஜ்குமார், அடிக்கடி தகராறு செய்து ஜெயிலுக்கு சென்று வருபவர் என்பதால் அவரது வீட்டில் ஒவ்வொரு ஜெயிலாக தேடி பார்த்துள்ளனர் மனோஜ்குமார் கிடைக்கவில்லை. போலீசாரும் அந்த கொலை வழக்கை அப்படியே கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகின்றது.

மலையன் கொலை வழக்கை விசாரித்த காவல்துறையினர் அளித்த சிறப்பு கவனிப்பல் மிரண்டு போய் இருவரும் கூட்டாளி மனோஜ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரு ரவுடிகளையும் அழைத்துக் சென்று, அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து மனோஜ் குமாரின் எலும்புகளை தோண்டி எடுத்தனர். பின்னர் எலும்புகள் பிணக் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

மனோஜ்குமார் எதற்காக வேட்டை நாயை கொன்றார் என்பதற்கு கைதான ரவுடிகளிடம் பதில் இல்லை என்பதால், இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்கலாமோ ? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT