Polimer News
Big Story சென்னை வீடியோ

மாணவிக்கு மிரட்டல் 2 பேர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்று சென்னையிலும் கல்லூரி மாணவியை செல்போனில் ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளம் பெண்ணொருவர் தனியார் கல்லூரியில் பி.இ முதலாமாண்டு பயின்று வருகிறார். மாணவியுடன் பள்ளியில் ஒன்றாக படித்த ஸ்ரீநாத் என்ற கல்லூரி மாணவர், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகியுள்ளனர்.

நண்பர்களாக பழகி வந்த நிலையில் மாணவியை காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்துள்ளார். தன்னை காதலிக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதாகவும், அதை நம்பி மாணவியும் காதலை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவியிடம், கல்லூரியில் தான் விட்டுவிடுகிறேன் என கூறி இருச்சக்கர வாகனத்தில் வற்புறுத்தி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிக்கு செல்லாமல் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்றதால் சந்தேகமடைந்த மாணவி அது குறித்து கேட்க, நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு செல்ல வேண்டும் என வலுகட்டாயமாக அழைத்து சென்றுள்ளான் மாணவன் ஸ்ரீநாத்.

மாமல்லபுரத்தில் விடுதி ஒன்றில் நண்பர்கள் விருந்தில் கலந்துக் கொண்டு பிறகு தனியறையில் ஸ்ரீநாத்தும் மாணவியும் இருக்கும் போது, அவர்களின் திட்டப்படி அங்கு மறைந்திருந்த ஸ்ரீநாத்தின் நண்பன் லோகேஷ் அவற்றை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துள்ளான்.

பின்னர் அதை ஸ்ரீநாத்தின் செல்போனிற்கு அனுப்பி வைக்க, அதை வைத்து மாணவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தான் வெளியில் செல்ல அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் இருவரும் சேர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

மறுநாள் தனது வீட்டில் யாருமில்லை அதனால் தன்னை சந்திக்க வரவேண்டும் என மிரட்ட, செய்வதறியாது ஸ்ரீநாத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார் மாணவி. அப்போது அந்த போட்டோவை அழிக்க வேண்டும் என மாணவி அழுது கொண்டே கேட்க, கட்டிப்பிடித்தால் போட்டோவை அழித்து விடுகிறேன் என ஸ்ரீநாத் கூறியதற்கு மாணவி உடன்பட அதையும் மறைந்திருந்து லோகேஷ் படமெடுத்துள்ளான்.

அந்த படத்தை மாணவியின் செல்போனுக்கு அனுப்பி தனது நண்பனுடன் உடன்பட ஸ்ரீநாத் மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் அறையிலேயே முடங்கி கிடந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரிக்க இந்த அதிர்ச்சி தகவலை மாணவி அழுதுக்கொண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் ஸ்ரீநாத் மற்றும் லோகேஷ் இருவரையும் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி சம்பவத்தில் வெளியில் சொல்ல முடியாமல் கயவர்களிடம் சிக்கியிருந்த சில பாதிக்கப்பட்ட பெண்களை போல் அல்லாமல் பெற்றோரிடம் தனது நிலையை தெரிவித்து புகார் கொடுக்க முன் வந்ததால் தான் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர் என சுட்டிக் காட்டிய போலீசார், இருவரும் வேறு யாரையாவது இதே போல மிரட்டியுள்ளனரா என விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Related posts

Polimer News