Polimer News
அரசியல் முக்கிய செய்தி

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தமிழகத்தை தட்டிக் கழித்தது என முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தமிழகத்தை தட்டிக் கழித்ததாகவும், அப்போது, நிதியமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரம், துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.

தாம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தாம் செயல்படுத்தியிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், தாம் ஒரு விவசாயி என்பதால், நீரை சேமிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதுதான் தமது முதல் கடமை என்றும் கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கை பொய்யறிக்கை என்றும், வெற்று அறிக்கை என்றும், முதலமைச்சர் குற்றம்சாட்டினார். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தபோது, தமிழ்நாட்டிற்கு, திமுக எதுவும் செய்யவில்லை என்றார்.

ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்தாரா? எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தமிழ்நாட்டை தட்டிக் கழித்ததாக குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, முதலமைச்சர் உரையாற்றினார்.

திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டும், மின் உற்பத்தி பற்றாக்குறையும் நிலவியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று, மின் உற்பத்தி திட்டங்களை ஊக்குவித்து, தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான குற்றம்சாட்டை முன்வைப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை உள்ளிட்ட ஊர்களில், பரப்புரையின்போது, மு.க.ஸ்டாலின், மிகவும் சுதந்திரமாக மேற்கொள்ளும் நடைபயணமே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக பரமாரிக்கப்படுவதற்கு சான்று என்றார்.

பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களுக்கு ஆளும் அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவறான வகையில் விமர்சனங்களை முன்வைப்பதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்சியின் தலைவர் நாகரீகமற்ற முறையில் பேசலாமா? என்றும் வினவியிருக்கிறார்.

பழனியில் நடைபெற்ற பரப்புரையின்போது, திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து வாக்குசேகரித்த முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தங்கு தடையின்றி, மக்கள் நலத்திட்டங்களை, ஆளும் அதிமுக அரசு முன்னெடுத்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர், தாம் ஒரு விவசாயி என்பதால், கொளுத்தும் வெயிலை கண்டு ஒருபோதும் அஞ்சுவதில்லை என்றார்…

விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதே, ஆளும் அதிமுக அரசின் முதன்மையான மார்க்கம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுவதை விட்டு விட்டு, மக்களுக்கு நல்ல செய்திகளை பிரசாரத்தில் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

Polimer News