Polimer News
தமிழ்நாடு முக்கிய செய்தி வீடியோ

களைகட்டிய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மிஸ் கூவாகமாக தருமபுரியைச் சேர்ந்த நபீஸா தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கடந்த 2ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் இருந்து இங்கு சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. முதல்கட்டமாக நடனப் போட்டிகளும், தொடர்ந்து ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, முதல், இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2019 மிஸ் கூவாகமாக தர்மபுரியை சேர்ந்த நபீஸா முதலிடத்தையும், கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாவது இடத்தையும், பவானி பகுதியை சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Related posts

Polimer News