Polimer News
சென்னை

சென்னையில் காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு பணியிடம் ஒதுக்கீடு

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளைய மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 1,707 வாக்குப்பதிவு மையங்களில் 62 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 7கம்பெனிகளை சேர்ந்த 610 துணைராணுவப்படையினரும், 17,000 காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். மேலும் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் 1000 பேர் தின ஊதிய அடிப்படையில் தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி வாக்குச்சாவடிக்கு ஒருவர் வீதம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படைக் காவலர்கள் 3000 பேரும், 3500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

அதில் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுமதிக் கடிதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள சுமார் 250 வாகனங்கள், மற்றும் அவற்றின் ஓட்டுநர்களுக்கும் அனுமதிக் கடிதம் உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Related posts

Polimer News