Polimer News
அரசியல் சற்றுமுன் முக்கிய செய்தி

ஓட்டுக்கு ரூ.2000 கொடுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு திமுகவிற்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மாம்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் கூட நீட் தேர்வு கூடாது எனக் கூறும் நிலையில், தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலும், நிதின் கட்கரியும் நீட் தேர்வு நீடிக்கும் என உறுதிபடக் கூறியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என நிதின்கட்கரி திட்டவட்டமாகக் கூறியுள்ளாரே, அதற்கு பாமகவின் பதில் என்ன என்றும் அவர் வினவினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது எப்படி என்பதை தி வீக் பத்திரிக்கையில் வெளியான செய்திக் கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி பேசினார்.

ஓட்டுக்கும் நோட்டுக் கொடுக்க தொடங்கிவிட்டார்களா என கூடியிருந்தவர்களை பார்த்து கேட்ட மு.க.ஸ்டாலின், 2 ஆயிரம் ரூபாய் அல்ல 2 லட்ச ரூபாய் கூட வாங்கிக் கொண்டாலும், வாக்குகளை திமுகவுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related posts

Polimer News