Polimer News
இந்தியா முக்கிய செய்தி

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்துக்கு தொடர்புடைய 50 இடங்களில் சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், 10 கோடி ரூபாயை கைப்பற்றியதுடன், 280 கோடி ரூபாய் பண பரிமாற்ற ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.

மத்திய பிரதேசேத முதலமைச்சர் கல்நாத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி பிரவீன் கக்காருக்கு சொந்தமாக இந்தூரில் இருக்கும் வீடு, அலுவலகம் உள்பட 50 இடங்களில் அதிகாலை முதல் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 23 இடங்கள் உள்பட, டெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

கமல்நாத்துக்கு ஆலோசகராக இருந்த ஆர்.கே. மிக்லானியின் ((RK Miglani)) டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அவரது சொகுசு காரிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் மற்றும் ஹவாலா பணி பரிமாற்றம் தொடர்பான சந்தேகத்தில் இந்த சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

பிரவீன் கக்காரின் வீட்டில் இருந்து மட்டும் 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மத்தியபிரதேசத்தில் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், முதலமைச்சர் கமல்நாத்துக்கு சிறப்பு உதவி அதிகாரியாக கக்கார் நியமிக்கப்பட்டார். இவர், முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் புரியாவிடமும் சிறப்பு உதவி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். கக்காரின் குடும்பத்தினர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரி சோதனையின்போது, 20 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள், 280 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ஐபிஎஸ் மற்றும் ஐஏஸ் அதிகாரிகள் செய்துள்ள முதலீடு தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் போது உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இந்த சோதனையின் போது பாதுகாப்புக்காக சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் உள்ளூர் காவல்துறையினர் செல்ல முயன்ற போது, சிஆர்பிஎப் வீரர்கள் தடுத்ததால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

டெல்லியில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் 150 பேர் மத்திய பிரதேசம் வருவதை சனிக்கிழமையே அறிந்த அம்மாநில உளவுத்துறையினர், அது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது தேர்தல் மற்றும் கூட்டுப்பணி தொடர்பாக சிஆர்பிஎப் வீரர்கள் வருகின்றனர் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்களிடம் தவறான தகவல் அளித்துவிட்டு இந்த சோதனைக்கு திட்டமிட்டுள்ளதாக மாநில உளவுத்துறையினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த வருமான வரி சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் கமல்நாத், அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய பாஜக அரசு பழிவாங்குவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். 

Related posts

Polimer News