கொரோனாவுக்கு 1013 பேர் பலி...!

0 1550

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணொலிக் காட்சி மூலம் உரையாடி ஆறுதல் கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கியுள்ள கொரேனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர ஒரே நாளில் 2 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் இதுவரை 31 ஆயிரத்து 728 பேர் கொடிய கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 298 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகம் முழுவதும் 42 ஆயிரத்து 500 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு முன்கூட்டியே சீனாவுக்குச் சென்றுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். தங்கள் அணியைச் சேர்ந்த மற்றவர்களும் விரைவில் சீனா வர இருப்பதாகக் கூறிய அவர், தங்கள் குழுவில் 10 முதல் 15 பேர் வரை இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே வெப்பமான காலநிலை வந்தால் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே ஏப்ரல் மாதம் வரை இதன் தாக்கம் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கு அமெரிக்க பட்ஜெட்டில் வரி விதிக்கப்பட்டிருப்பதால் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நீண்ட நாட்களுக்குப் பிறகு, பொதுமக்கள் முன் தோன்றினார். பெய்ஜிங்கில் உள்ள கொரானா வைரஸ் கண்டறிதல் மையம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தாக்குதல் தொடங்கி கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு அதிகமாக அவர் பொதுமக்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், காணொலிக் காட்சி மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது பேசிய ஜின்பிங், கொரோனாவை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம் நோயின் தாக்கம் மற்றும் தீவிரத் தன்மை குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஊகானில், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் இடங்களில், ஒலி - ஒளி வடிவ டிரோன்கள் மூலம், மாஸ்க் அணியாதவர்கள், கூட்டமாக இருக்கும் பொதுமக்களை கண்காணித்து, கொரானா குறித்து எச்சரிக்கும் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments