பிறப்பின் மீதான சந்தேகம் - பெற்றோரால் கொல்லப்பட்ட பிஞ்சு
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி பெற்ற தாயே கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. குழந்தையின் பிறப்பு மீது சந்தேகம் கொண்டு அதனை கொலை செய்ய யோசனை கொடுத்த கணவனையும், அவனது குடும்பத்தாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவன் அமல்ராஜ். கடந்த 5ஆம் தேதி அமல்ராஜின் 11 மாத ஆண்குழந்தையின் சடலம் வீட்டிலுள்ள தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. கணவர் அமல்ராஜ்தான் குழந்தையை கொன்றதாக அவனது மனைவி தந்தையுடன் சென்று போலீசில் புகாரளித்துள்ளார். விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு குழந்தையின் பிறப்பு மீது சந்தேகம் கொண்டு பெற்ற தாய் உட்பட ஒரு குடும்பமே சேர்ந்து அந்த பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
18 வயதான அமல்ராஜின் மனைவி கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியிலுள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு அதன் மூலம் கருத்தரித்துள்ளது. 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது உறவினர்கள் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். சில மாதங்களில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
அமல்ராஜின் மனைவிக்கு அவரது மாமன் மகன் ஒருவனோடு ஏற்கனவே பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறி அமல்ராஜ் புறக்கணித்து வந்துள்ளான். அவனுடைய பெற்றோரும் குழந்தையை தூக்கவோ, பரமாரிக்கவோ மறுத்து புறக்கணித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் “குழந்தையை கொன்றுவிட்டால் நமக்குள் பின்னாளில் பிரச்சனை வராது” என அமல்ராஜ் மனைவிக்கு யோசனை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்தப் பெண் தனது தந்தை சூசை மாணிக்கத்திடம் அது குறித்து கூறியுள்ளார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார்.
அமல்ராஜோடு சேர்ந்து அவனது பெற்றோரான மரிய லூகாசும் விமலாவும் குழந்தையை கொன்றுவிடுமாறு அழுத்தம் தந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 5ஆம் தேதி அந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார் அந்தப் பெண். அமல்ராஜு வீட்டின் வெளியில் கண்காணிக்க உட்புறம் இருந்த தொட்டியில் குழந்தையின் தலையை அழுத்தி கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் இருந்து மகளை காப்பாற்ற எண்ணிய சூசை மாணிக்கம், மருமகன் மீது பழியைப் போட்டு தப்பிக்க முயன்று அவரும் போலிசில் சிக்கியுள்ளார். தற்போது குழந்தையைக் கொன்ற அந்தப் பெண், அமல்ராஜு, சூசை மாணிக்கம், அமல்ராஜுவின் பெற்றோரான மரிய லூகாஸ், விமலா என 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்னரே திருமணம் செய்ததால் அமல்ராஜு மீது போக்சோ சட்டமும் பாய்ந்திருக்கிறது.
தங்கள் சுயநலத்துக்காக ஒரு குடும்பமே சேர்ந்து தாயின் கையாலேயே ஒரு பிஞ்சுக் குழந்தையை கொல்ல வைத்த கொடூரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments