புரோக்கர் பரபரப்பு வாக்குமூலம்....அடுத்தடுத்து தொடரும் கைதுகள்....
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு விஏஓ தேர்விலும் முறைகேடு அம்பலமாகியுள்ளது. அந்த வகையில், வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டம் அரியூரை சேர்ந்த நாராயணன் என்கிற சக்தி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் நால்வர் முறைகேடு செய்து பணியாற்றி வருவது தெரியவந்தது.. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், சென்னை அரும்பாக்கம் செந்தில்ராஜ் என்கிற கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரோக்கர் ஜெயக்குமாரிடம் தலா 7 லட்ச ரூபாய் பணம் கொடுத்து பணியில் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் போலீஸ் காவல் முடிவுற்றதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஓம்காந்தனுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த 3 தனியார் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் பண்டல்கள் அனுமதிக்கப்பட்ட காரில் செல்லும்போது, மற்றொரு காரில் வந்த இடைத்தரகர் ஜெயக்குமார், சினிமா சேசிங் பாணியில், மாற்றி எடுத்துச் சென்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சிபிசிஐடி தரப்பு கூறியிருக்கிறது.
இதற்கிடையே, இடைத்தரகர் ஜெயக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் கூறியுள்ளன. தேர்வர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தேர்வில் முறைகேடு செய்த விவரங்களையும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட எரிசக்தி துறை ஊழியர் திருக்குமரனை, 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முறைகேடு திமுக காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடி என்றும், தற்போது அதிமுக அரசு அதை களையெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Comments