விஜய்யின் பலத்தை காட்ட திரளும் கூட்டம்..! மாஸ்டர் பிளான் என்ன ?

0 1747

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய பின்னர் நடிகர் விஜய்யை காண நெய்வேலியில் தினமும் பெருங்கூட்டம் கூடியது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவிற்கு விஜய் ரசிகர்களின் பலத்தை காட்ட எஸ்.ஏ. சந்திரசேகரனின் போட்ட மாஸ்டர் பிளான் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... 

நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அண்மைகாலமாக அவர் தொடர்பான எந்த ஒரு தகவலாக இருந்தாலும், பட வெளியீடு தொடங்கி, மேடை பேச்சு வரை அனைத்தும் சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறிவருகின்றது

அந்தவகையில் கடந்த 5 ந்தேதி நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமானவரித்துறையினர், விசாரணைக்காக காரில் அழைத்து சென்ற சம்பவம் விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வருமானவரித்துறையை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

விடிய விடிய விசாரணை நடத்திய பின்னர் விஜய் வீட்டில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றப்படாத நிலையில் சோதனை நிறைவு பெற்றதாக அறிவித்தது வருமானவரித்துறை. இதையடுத்து விஜய் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டுவிட்டதாக கூறி மீண்டும் மத்திய அரசையும் சம்பந்தம் இல்லாத மாநில அரசையும் கண்டித்து விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புக்கு மீண்டும் விஜய் சென்று விட்ட நிலையில் அங்கு அவரை பார்க்க எந்த ஒரு ரசிகர் கூட்டமும் இல்லை, அங்கு படபிடிப்பு நடத்த கூடாது என்ற கோஷத்துடன் பாரதீய ஜனதாவினர் கொடி பிடித்தவுடன் அதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் களமிறங்கினர்.

அடுத்த சிலமணி நேரங்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஏராளமான கார்களில் கொடியுடன் விஜய் ரசிகர்கள் அங்கு திரள தொடங்கினர். கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தும் நிலை உருவானது.

இதில் சில ரசிகர்கள் காயம் பட்டனர். அன்று விஜய் யாரையும் கண்டு கொள்ளாமல் காரில் ஏறிசென்றுவிட்டார். சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதாலும் பட்டி தொட்டியெங்கும் விஜய் நெய்வேலிக்கு வந்துள்ளார் என்ற தகவல் காட்டூத்தீயாய் பரவியதாலும் பெருங்கூட்டம் திரள தொடங்கியது.

முண்டியடித்த ரசிகர்களுக்கு கோவிலில் சுண்டல் கொடுப்பது போல அவ்வப்போது மத்திய பாதுகப்பு படையினர் தடிஅடியை பரிசாக வழங்கினர்..!

இந்த நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை விஜய் ஒரு வேனின் கூறை மீது ஏறி தனது ரசிகர் படையை உற்சாகப்படுத்த செல்பி எடுத்து மகிழ்வித்தார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வழக்கம் போல பேரிகார்டு முன்பு விஜய் ரசிகர்கள் கோசமிட்டபடி நிற்க மனிதசங்கிலி போல பல பெண்கள் விஜய்ய்யை பார்க்க வெயிலில் காய்ந்தபடி நின்றனர்

மாலை பள்ளி மற்றும் கல்லூரி விட்டதும் பெரும் கூட்டம் முண்டியடிக்க தொடங்கியது. விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் சில மாணவிகளும் பள்ளிக்கூட சீருடையுடன் காத்திருந்தனர்.

நெய்வேலி சுரங்க வாயில் மாபெரும் கூட்ட அரங்கு போல மாறியது. இருள் சூழந்த நிலையில் சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வாவுடன் பேருந்து ஒன்றின் மீது ஏறினார் விஜய்..!

ரசிகர்களை பார்த்து கையசைத்த அவர், தன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு தலைவணங்குவதாக கைகூப்பி வணங்கினார்

பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி காரில் ஏறி அங்கிருந்துபுறப்பட்டார். தினமும் மாலை வேலையில் திரண்ட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் மத்திய பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் திணறினர்.

இந்த பெருங்கூட்டம் திரட்டப்படுவதற்கு மாஸ்டர் பிளான் ஒன்று தான். மத்திய பாரதீய ஜனதா அரசிற்கு விஜய்யின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே எஸ்.ஏ.சந்திர சேகரனின் உத்தரவின் பேரில் முகநூல் வாயிலாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த பெருங்கூட்டத்தை ஒருங்கிணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசை கலங்கடிக்க தினமும் பெருங்கூட்டம் கூடிய நிலையில் வருகிற புதன்கிழமைக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments