நீண்ட நாட்களுக்கு பின் மக்கள் முன் தோன்றிய சீன அதிபர்

0 1676

சார்சைக் காட்டிலும் வேகமாக பரவும் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 910ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சீன அதிபர் மக்கள் முன் தோன்றியுள்ளார். 

கொரானா வைரசின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வூகான் நகரம் உட்பட சீனாவில், கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 910ஆக அதிகரித்துள்ளது. உலகளவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 97 பேர் பலியாகினர்.

சீனாவில் தங்கியுள்ள 27 வெளிநாட்டினருக்கு, கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்திருக்கிறது. பொது சுகாதாரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும், "தீவிரமான மற்றும் நெருக்கத்தில் வந்துவிட்ட அச்சுறுத்தல்" என பிரிட்டன் அரசு அறிவித்திருக்கிறது.

டோக்கியோ அருகே கடலோரம், 3,700 பேருடன் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும், தி டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில், கொரானா வைரசால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை, 135ஆக அதிகரித்திருக்கிறது.

ஒரே நாளில், 65 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சொகுசு கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டிருப்போருக்கான தனிவார்டுகள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கொரானா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நீண்ட நாட்களுக்குப் பிறகு, பொதுமக்கள் முன் தோன்றினார். பெய்ஜிங்கில் உள்ள கொரானா வைரஸ் கண்டறிதல் மையம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஊகானில், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் இடங்களில், ஒலி-ஒளி வடிவ டிரோன்கள் மூலம், மாஸ்க் அணியாதவர்கள், கூட்டமாக இருக்கும் பொதுமக்களை கண்காணித்து, கொரானா குறித்து எச்சரிக்கும் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொண்டிருக்கிறது.

புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, சீனாவில் பல மாகாணங்களில், மக்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்பி வருகின்றனர். தங்கள் நாட்டில், கொரானா வைரசால் பாதிக்கப்பட்டிருப்போரில், 8 புள்ளி 2 விழுக்காடு பேர் நலமடைந்திருப்பதாக, சீன அரசின் பொது சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

கொரானா வைரஸ் எப்படி பரவியிருக்க கூடும் என்ற ஆராய்ச்சியில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நோய்குறியியல் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரானா பாதிப்பு எதிரொலியால், சிங்கப்பூரில், வருகிற 27ஆம் தேதி தொடங்கிவிருந்த மகளிர் உலக கோப்பை கோல்ப் போட்டி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

தென்கொரியாவில் உள்ள தனது மூன்று கார் உற்பத்தி ஆலைகளை தற்காலிகமாக மூடுவதாக, கியா மோட்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத நோய்தொற்றுகளையும் தடுக்க வல்ல, நவீன ரக முகமூடிகளை தயாரிக்கும் பணிகளை, ஜப்பான் தீவிரப்படுத்தியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments