ஐ.பி.எஸ். அதிகாரியின் வரதட்சணை கொடுமை ? மனைவி போலீசில் புகார்..!
500 சவரன் நகை, 4 கோடி ரூபாய் பணத்தை வரதட்சணையாக கொடுத்தும் போதாமல் மேலும் வரதட்சணை கேட்டு தனது கணவர் துன்புறுத்துவதாக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் மனைவி சென்னை காவலர் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையை சேர்ந்த அருணா என்பவர் யு.பி.எஸ்.சி தேர்வெழுத பயிற்சி மையத்தில் பயின்ற போது, ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்ஸில் தேர்வாகி ஹைதராபாத்தில் பணியாற்றி வருகிறார் ஆனந்த். ஆனந்துக்கும் அருணாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் திருமணம் நடந்துள்ளது. 500 சவரன் நகை, 4 கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2 ஆண்டுகள் கடந்த நிலையில், அருணாவின் தந்தைக்குச் சொந்தமாக சென்னை தேனாம்பேட்டையிலுள்ள உணவகம் ஒன்றையும் தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு கணவர் ஆனந்த் கேட்டதாகவும் அதற்குத் தாம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறார் அருணா. அதனையடுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யும் நோக்கில் ஆனந்த்தும் அவரது குடும்பத்தினரும் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு கொடுமைகள் செய்து வந்ததாகக் கூறுகிறார் அவர்.
கணவரின் கொடுமை குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறும் அருணா, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஒரு வாரத்துக்குள் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் அருணா புகாரளித்துள்ளார்.
Comments