SC-ST திருத்த சட்டம்-2018, அரசமைப்புச் சட்டப்படி செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
விசாரணைக்கு முன்பே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வகை செய்யும், 2018ஆம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக, 2018ஆம் ஆண்டு மார்ச்சில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்தது.
புகார் கொடுத்தாலே எஃப்ஐஆர் பதிவு, உடனடி கைது நடவடிக்கை, முன்ஜாமீன் வழங்க மறுப்பது போன்ற சட்டப் பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், திருத்த சட்டம் ஒன்று 2018ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் அமர்வு, 2018ஆம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி திருத்த சட்டம் அரசமைப்புச்சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய பூர்வாங்க விசாரணையோ காவல்துறை மூத்த அதிகாரியின் அனுமதியோ தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று தெரியவரும்போது மட்டுமே நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனும் சகமனிதனை சமமாக நடத்துவதோடு, சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை பேணி பாதுகாக்க வேண்டும் என நீதிபதியான ரவீந்திர பட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தாராளமாக முன்ஜாமீன் வழங்குவது, நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும் என்றும், பூர்வாங்க ஆதாரம் இல்லை எனும் பட்சத்திலேயே நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்யலாம் என்றும் ரவீந்திர பட் கூறியுள்ளார்.
Comments