முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.. ரூ.4,600 கோடிக்கு வாங்கிய பில்கேட்ஸ்.!
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், மிக பிரமாண்டமான சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார்.
தாராளம்:
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொடர்ந்து தனது பணத்தை தாராளமாக செலவிட்டு வருகிறார்.
பிரமாண்ட கப்பல்:
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார். இதன் பொருட்டு
பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைட்ரஜனில் இயங்கும் கப்பல்:
பில்கேட்ஸ் மிகவும் விரும்பி வாங்கியுள்ளதாக கூறப்படும் பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல், முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என தெரிகிறது. மேலும் இதில் பல அதிநவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினோட் (Sinot) என்ற டச்சு நிறுவனதால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 3,750 நாட்டிகல் மைல்கள் வரம்பில், 17 knots டாப் ஸ்பீடில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கப்பலின் நீளம் 112 மீட்டர், அதாவது சுமார் 367 அடியாகும்.
சவால்:
எரிபொருள் கலங்களுக்கு மின் ஆற்றலை வழங்கும் திரவ ஹைட்ரஜனால் இந்த சொகுசு கப்பல் இயங்கும் என சினோட் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பில்கேட்ஸ் வாங்கியுள்ள சொகுசு கப்பல் பற்றி கூறியுள்ள சினோட், தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் அழகியல் சார்ந்தும் இந்த சொகுசு கப்பலை வடிவமைத்து வருகிறோம். தவிர முழுமையாக செயல்படும் திரவ ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களை செயல்படுத்துவதும் கூட எங்களுக்கு சவாலாக இருக்கும் என கூறியுள்ளது.
அதிநவீன வசதிகள்:
இந்த பிரமாண்டமான சொகுசு கப்பல்கள் 5 தளங்களை கொண்டது. இதில் 2 வி.ஐ.பி ஸ்டேரூம்கள், பிரமாண்டமான ஒரு உரிமையாளர் காட்சி அரங்கம், 14 இரட்டைக் குழு அறைகள், 2 அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை அடக்கம். மேலும் இந்த கப்பலில் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை , யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம் அடங்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் அமைக்கப்படும்.
நீச்சல் குளம், ஹெலிபேட், ஸ்பா மற்றும் உட்புறக் குளம் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை பில்கேட்ஸின் இந்த புதிய சொகுசு கப்பல் கொண்டுள்ளது. மேலும் வட்ட வடிவமைப்பிலான அற்புத படிக்கட்டுகள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பற்றாக்குறை காரணமாக படகில் “டீசல் பேக்அப் ” இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் இந்த சொகுசு கப்பல் 2024-க்கு முன்னர் கடலுக்குச் செல்ல வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
Comments