பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்.. காவிரி டெல்டாவை காப்பாற்ற உறுதி..!
பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், காவிரி டெல்டா பகுதி "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும், தஞ்சை தரணியில், அண்மைகால ஹைட்ரோ கார்பன் திட்ட முன்நகர்வுகளுக்கு எதிர்ப்பு எழுந்து வந்தது. மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று, விவசாயிகளும், விவசாய சங்கங்களும், நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தச் சூழலில், சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இதற்காக தனிச்சட்டம் இயற்றப்படும் என்றார். பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை செய்து வருவதாகவும், எனவே, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்பகுதியை பாதுகாக்க வேண்டிய அவசர அவசியம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகியவை காவிரி டெல்டா மாவட்டங்களாகும். இங்கு, சுமார் 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் உட்பட 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு, கச்சா எண்ணெய் மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முன்னெடுக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முன்னெடுத்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கடல்நீர் உட்புக வாய்ப்பு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது. இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உட்பட, விவசாயத்துக்கு எதிரான எந்த திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதை முற்றாக தடுக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை எழுந்தது. இவ்வாறு, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் அறிவிப்பு சட்டமானால், விவசாயத்தை பாதிக்கும் என வகைப்படுத்தப்படும் எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது. மேலும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். புதிய ஹைட்ரோன் கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கிடைக்காது.
டெல்டா பகுதியில் விளையும் விளைபொருட்கள், மூலப் பொருட்களை கொண்டு செயல்படும் தொழிற்சாலைகள், வேளாண் சார்ந்த தொழில்கள் அனுமதிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படும். இவ்வாறு, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றினால், அது நாட்டிலேயே முதன்முறையாக விவசாயத்தை காத்திடும் மிக முக்கிய நடவடிக்கையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments