வண்ணமயமாகும் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள்..!
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். எண்ணங்களை வண்ணமயமாக்க வண்ணங்களால் அழகுபடுத்தப்படுகிறது சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள். இது குறித்த ஒரு செய்தி...
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பகுதியில் உள்ள எழில் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளின் சுவர்கள் வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன் (St-Art India Foundation) என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஸ்பெயின், கனடா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 வெளிநாட்டு ஓவியர்களும், இந்தியாவின் 10 ஓவியர்களும் என மொத்தம் 15 ஓவியர்களின் கை வண்ணத்தில் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன..
ஓவியக் கலையின் சிறப்பை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும் மக்களிடையே நேர்மறையான எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இருந்த எழில் நகர் குடிசைமாற்று வாரிய வெளிப்புற சுவர்கள் வண்ணமயமான ஓவியங்களால், கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இரு குழந்தைகளின் சிரிப்பை சித்தரிப்பது போல் உள்ள ஓவியம், பூக்களை தன் குழந்தையுடன் ஒரு பெண் ரசிப்பது போன்ற ஓவியம் என ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு சிறப்பை பெற்று பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த பணிகள் இன்னும் இருபது நாட்களில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட வெளிப்புற சுவர்கள் உள்ள இந்த பகுதியில் தற்போது 15 சுவர்களில் மட்டுமே ஓவியங்கள் வரைய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
கண்ணகி நகர் மற்றும் எழில் நகரின் குடிசைமாற்று வாரிய வெளிப்புற சுவர்களில் வரையப்பட்டு வரும் இந்த ஓவியங்கள் அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது. மேலும் இது போன்ற ஓவியங்கள் மூலமாக போதைக்கு அடிமையாக உள்ளவர்களை நல்வழிபடுத்தும் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் அசுத்தமாக காணப்படும் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் இதுபோன்ற வண்ணம் தீட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் குடியிருப்புகள் மட்டுமின்றி அங்கே வசிக்கும் மக்களின் மனங்களும் வண்ணமாகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை...
Comments