கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 813 ஆக உயர்வு...

0 2941

சீனாவில் கொரானா வைரசுக்கு ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததை அடுத்து,  பலி எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது சார்ஸ் வைரஸால் முன்பு ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

சீனாவின் ஹூபே மாகாணம் வூகானில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் கொரானா வைரஸ் பரவியுள்ளது. சீனாவுக்கு சென்று திரும்பிய பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, தைவான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிலருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சீனாவுக்கு செல்வதை தவிர்க்கும்படி தங்களது நாட்டு மக்களை பல்வேறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், சீனாவில் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 2,147 பேர் உள்ளிட்ட 2656 பேருக்கு சனிக்கிழமை ஒரே நாளில் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சீனாவில் ஒரே நாளில் கொரானா வைரசுக்கு 89 பேர் பலியாகினர். இதில் ஹூபே மாகாணத்தில் அதிகப்பட்சமாக 81 பேர் உயிரிழந்தனர். இதனால் சீனாவில் மட்டும் கொரானா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 811-ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவரும், சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங் சுயாட்சி பகுதியில் ஒருவரும் கொரானா வைரஸால் ஏற்கெனவே பலியாகியுள்ளனர். இவர்களோடு சீனாவில் பலியான 811 பேரையும் சேர்த்தால் உலகில் கொரானா வைரஸுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல, புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்ட 2656 பேரையும் சேர்த்து, சீனாவில் மொத்தம் 37,198 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, ஹூபே மாகாணத்தை சேர்ந்த 2,067 பேர் உள்பட புதிதாக 3,916 பேருக்கு கொரானா வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு இருப்போருடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 183 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கடந்த 2002-2003ம் ஆண்டில் பரவிய சார்ஸ் வைரஸால் நேரிட்ட நோய்க்கு மொத்தம் 774 பேர் பலியாகியிருந்தனர். அந்த எண்ணிக்கையை கொரானா வைரஸ் பலி எண்ணிக்கை தற்போது தாண்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments