கொரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?
சீனாவிலிருந்து கொரானா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 17ஆவது இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்கள் வாயிலாக கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
ஜெர்மனியின் பெர்லினை சேர்ந்த ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், விமானப் போக்குவரத்தை மாதிரியாக கொண்டு, சீனாவை தவிர்த்து கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள 30 நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், சீனாவுக்கு வெளியே தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரானா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில், டெல்லி விமான நிலையத்துக்கு கொரானா வைரஸ் பாதிப்பு நபர்கள் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்பிருப்பதாகவும், இதற்கடுத்து மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்போர் அதிக எண்ணிக்கையில் வர வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆதலால் சம்பந்தப்பட்ட 30 நாடுகளும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ள இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் இதுவரை 1486 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 3 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேற ஆரம்பித்திருப்பதாகவும், இருப்பினும் 28 நாள்களுக்கு தனிமை வார்டில் கண்காணிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹூபேயில் சிக்கித் தவித்த கேரள மாணவர்கள் 15 பேர், கொச்சிக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பினர். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர்கள், கலமாசேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு (Kalamassery Medical College hospital) உடனடியாக அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் சீனாவில் இருந்து திரும்பிய பிறரை போன்று தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்றும், மருத்துவ பரிசோதனையில் வைரஸ் இல்லை என்பது உறுதியான பிறகே சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Comments