பைனான்சியர் அன்புச்செழியன் வரி செலுத்த ஒப்புதல்
வருமான வரிச் சோதனையில் சிக்கிய சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் வரி ஏய்ப்பு செய்ததற்கும், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் முறையான வரி செலுத்த ஒப்புக் கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிகில் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட ஊதியம் தொடர்பான புகாரின் பேரிலும், அதனைத் தயாரித்த கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை அழைத்து வந்து, அவரது வீட்டில் கிட்டத்தட்ட 23 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தினர். பின்னர் ஏஜிஎஸ் நிறுவனத்திலும், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர்.
மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் வராத 77 கோடி ரூபாய் மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மத்திய நேரடிகள் வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அன்புச்செழியன் சுமார் 165 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கும், கைப்பற்றப்பட்ட 77 கோடி ரூபாய்க்கும் முறையாக வரி செலுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவரைப் போலவே ஏஜிஎஸ் குழுமத்தினரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments