ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு... 20 பேர் உயிரிழப்பு

0 897

தாய்லாந்தில் இளம் ராணுவ அதிகாரி ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கோரத் என்ற இடத்தில் சார்ஜெண்ட் மேஜர் ஜக்கரபந்த் தொம்மா என்ற இளநிலை ராணுவ அதிகாரி நேற்று காலை அங்கிருந்த ராணுவக் கவச வாகனத்தைக் கடத்த முயன்றார். அவரைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்.

பின்னர் அங்கிருந்து ராணுவ ஆயுதங்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற தொம்மா ஏராளமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அதே வாகனத்தில் டெர்மினல் 21 என்ற வணிக வளாகத்திற்கு வந்தார்.

முன்னதாக அவர் அங்கிருந்த புத்த விகாரத்திலும் துப்பாக்கியோடு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வணிக வளாகம் சென்ற அவர், வெறிபிடித்தவர் போல கண்களில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுத் தள்ளினார். வணிக வளாகத்தில் அவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சப்தம் வளாகத்தின் வெளியே எதிரொலித்தது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மீதும் தொம்மா துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பொதுமக்களில் ஏராளமானோரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு வணிக வளாகத்தில் பதுங்கிக் கொண்டார். பின்னர் வணிக வளாகத்தில் காயமடைந்தவர்களை மீட்கவும், தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்கவும் ராணுவ கமாண்டோக்கள் புகுந்தனர்.

அப்போது மறைந்திருந்த ராணுவ அதிகாரி தொம்மா நடத்திய திடீர் தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழ்நிலையிலும் தொம்மா அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக படம் பிடித்து பதிவேற்றிக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தொம்மாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் வணிக வளாகத்திற்குள் புகுந்த ராணுவ வீரர்கள் ஆங்காங்கே காயமடைந்தவர்களை மீட்டு வெளிக் கொணர்ந்தனர்.

தொடர்ந்து காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நிகழ்விடத்திலும், படுகாயமடைந்து மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 35க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை 3 மணி வரை துப்பாக்கிச் சப்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் இறுக்கமான சூழல் நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய தொம்மா எங்கு உள்ளார்? ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்து விட்டாரா? அவரது பிடியில் இன்னும் எத்தனை பேர் பிணையக் கைதிகளாக உள்ளனர்? அவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு என்ன காரணம் என்ற விபரங்களை தெரிவிக்க தாய்லாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ஆனால் டெர்மினல் 21 வணிக வளாகத்தைச் சுற்றிலும் போலீசாரும், ராணுவத்தினரும் குவிந்துள்ளனர். நிலப்பிரச்சனையில் சிக்கித் தவித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் இவ்வாறு செய்ததாகவும் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments