மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா
மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
இந்தியா மட்டுமன்றி, தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா நேற்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகனுக்கு அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து குவிந்தனர்.
முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், ஏராளமானோர் காவடிகளை ஏந்தியும், அலகு குத்தியும் வந்தனர். 272 படிகள் ஏறிச் சென்று, குகைக்குள் வீற்றிருக்கும் முருகப் பெருமானை அவர்கள் வழிபட்டனர். நடப்பாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை முருகன் கோவில் சார்பாக முப்பரிமாண ரதம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பினாங்கில் உள்ள தண்ணீர்மலை, ஈப்போவில் உள்ள கல்லுமலை கோவில்களிலும் பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்தினர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் இந்த திருவிழாவில் பங்கேற்றனர். கொரானோ வைரஸ் அச்சுறுத்தலால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் வழக்கம் போல, ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
சிங்கப்பூரில், சீனிவாசப் பெருமாள் கோவிலில் இருந்து தைப்பூச ஊர்வலம் புறப்பட்டது. காவடி ஏந்தியபடியும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக தண்டாயுதபாணி ஆலயத்திற்கு வந்தனர்.
மொரிஷியஸ் நாட்டில் தைப்பூசத்தையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான தமிழர்கள் காவடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது.
Comments