வேலைவாங்கித் தருவதாக மோசடி ...பள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார்...!
மத்திய அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாக போலியான ஆவணங்களை தயார் செய்து 80 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக பரமக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது எஸ்.பியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி புகார் மனு ஒன்றை அளித்தார். மீனவரான ஜகதீசன் அடிக்கடி ராமேஸ்வரத்திலுள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுவருவது வழக்கம். அப்போது பரமக்குடி ஆயிர வைஸ்ய பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றும் இளங்கோ என்பவர் அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
தனது மனைவி உஷா அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் தம்பி தங்கபாண்டியன் அருப்புக்கோட்டையில் காவல் ஆய்வாளராக பணியாற்றுவதாக ஜகதீசனிடம் கூறிய இளங்கோ, அதன் காரணமாக மத்திய, மாநில அரசுத் துறைகளில் பலரை தமக்குத் தெரியும் என்று கூறியதாகத் தெரிகிறது.
எனவே தெரிந்தவர் எவரேனும் அரசு வேலைக்கு முயற்சித்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறிய இளங்கோவின் பேச்சை நம்பி, நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரிடம் வேலைக்குத் தகுந்தாற்போல் தலா 3 லட்சம் முதல், 10 லட்சம் வரை என சுமார் 83 லட்ச ரூபாய் வரை வாங்கி இளங்கோவனிடம் கொடுத்ததாகக் கூறுகிறார் ஜகதீசன்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுத்துறை வங்கிகள், மெட்ரோ உள்ளிட்டவைகளின் பெயரில் போலி விண்ணப்பங்கள், அழைப்புக் கடிதங்கள் தயார் செய்து நம்பவைத்திருக்கிறார். 3 முதல் 4 ஆண்டுகள் கடந்த நிலையில், அவை அனைத்தும் போலி என தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொடுத்த பணத்தை கேட்டபோது, ஆள் வைத்து, ஆசிரியர் இளங்கோ மிரட்டுவதாக சொல்லப்படுகிறது.
புகாரின் பேரில் இளங்கோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளங்கோ பணிபுரியும் பள்ளித் தரப்பு, தங்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இளங்கோ தற்போது எங்கு உள்ளார் எனத் தெரியாத நிலையில், நமது செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.
Comments