தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா
சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் கருத்தரங்கில் சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டு கால்நடைகள் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
விழாவையொட்டி கால்நடை கல்லூரிகளில் சேர்வது தொடர்பாக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் விளக்கம் அளிக்கின்றனர். கால்நடை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளுக்கு பயன்படக் கூடிய நவீன எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்தும், நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு செயல்விளக்கமும் அளிக்கப்படுகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 3 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments