பழனியில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா.. 10 நாள் கோலாகலத்திற்கு பின்னால் இருக்கும் வரலாறு.!
தமிழ் கடவுள் முருகபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் தைப்பூச தினமான இன்று, அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் தைப்பூச திருவிழா, கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் செவ்வாய் கிழமை தெப்ப திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. பழனியில் இவ்விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவதற்கு காரணமாக கூறப்படும் தகவல்களை காணலாம்.
சங்க காலத்தில் இருந்தே வழிபாடு:
சங்க காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் முருகவழிபாடு இருந்து வருகிறது. மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும் என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.முருககடவுளையே இங்கு சேயோன் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளில் குறிஞ்சி நில கடவுளாக வழிபடப்பட்டிருக்கிறார் முருகன். அறுபடை வீடுகளில் இன்றும் முருக வழிபாடுகள் நடைபெற்று வருவதற்கு காரணம் இதன் தொடர்ச்சி தான் என கூறப்படுகிறது. அறுபடை வீடுகளிலும் இந்த தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகிறது.
தை மாத சிறப்பு:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, முருக பெருமானுக்குரிய வழிபாட்டில் முக்கிய நாளாக இருக்கிறது.
பழனியில் 10 நாள் கோலாகலம்:
பொதுவாக தை மாதத்தில் அறுவடை பணிகள் நிறைவடையும். மக்களிடம் செல்வ வளமும் அதிகரித்திருக்கும். எனவே அறுவடை முடிந்ததும் பழனி முருகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோலாகல வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கமே நாளடைவில் தைப்பூச கொண்ட திருவிழாவை 10 நாட்கள் கொண்ட விழாவாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
நேர்த்திகடன்:
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு குவிந்து வருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மச்ச காவடி என பல வகையான காவடிகளை எடுத்து மேல தாளத்துடன் முருகனை தரிசித்து நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.
பக்தர்களின் நம்பிக்கை:
தைப்பூசத்தின் அடையாளமே பாதயாத்திரை தான். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழா மன்னர்கள் காலத்தில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பகல் நேரத்தில் சாலையோரங்களில் உள்ள மண்டபங்களில் தங்கி ஓய்வு எடுக்கின்றனர். இரவு நேரத்தில் தான் பாதயாத்திரை செல்கின்றனர். தை மாத பூச நட்சத்திரத்தின் போது மேல் சட்டை போடாமல் சாலையில் பாதயாத்திரை போவதால், நிலவின் வெளிச்சம் தோல் மீது நேரடியாக பட்டு வியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெளிநாடுகளிலும் கோலாகலம்:
தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலுமே தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியா இலங்கை மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் தைப்பூச நாள் தேசிய விடுமுறை நாளாகும்.மலேசியாவின் சில மாகாணங்களில் சில வங்கிகளுக்கு கூட தைப்பூச விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழ் அறிஞர்களின் கணிப்பு:
தைப்பூச நாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம். தைப்பூசத்தன்று சூரியன் மகர கோட்டில் தெற்கும், பூசநட்சத்திர கூட்டம் கடக கோட்டில் வடக்கும் இருக்கும். அப்போது பூச மீனும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இதை தான் தமிழர்கள் தைப்பூச திருவிழாவாக கொண்டாட துவங்கி இருக்கலாம் என்பது தமிழ் அறிஞர்களின் கணிப்பு.
Comments