டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, அரசுப் பணியில் உள்ள 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 அரசு ஊழியர்கள், 2 டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள், 2 இடைத்தரகர்கள், 9 தேர்வர்கள் மற்றும் ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 15 அரசு ஊழியர்கள், 3 காவலர்கள், 1 இடைத்தரகர், ஒரு கிராம நிர்வாக அலுவலர் என 20 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் மற்றும் மயிலாடுதுறை சேர்ந்த அரசு ஊழியர்கள் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று, அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம்காந்தன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments