ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து அணி..!
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்த் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது.
ஹாமில்டனில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்த் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆக்லாந்தில் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்களை சேர்த்தது.
அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கப்தில் 79 ரன்களும், மூத்த வீரர் டெய்லர் 73 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் சாகல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 274 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே ரன்களை குவிக்க திணறியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. குறிப்பாக, கேப்டன் விராட் கோலி 15 ரன்களிலும், மூத்த வீரர் கே.எல். ராகுல் 4 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
ஓரளவு தாக்கு பிடித்து ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களிலும், நவ்தீப் சைனி 45 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். தோல்வியை தவிர்க்க ரவீந்திர ஜடேஜா போராடிய போதிலும் பலன் கிடைக்கவில்லை.
55 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவரும் ஆட்டமிழக்கவே, 49ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.
இதன்மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்த் கைப்பற்றியது. 3ஆவது ஒருநாள் போட்டி, வரும் 11ம் தேதி நடைபெறுகிறது
Comments