டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மந்தமான வாக்குப் பதிவு...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 42.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஒரு கோடியே 47 லட்சம் வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அரசியல்வாதிகள், இளைஞர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனளாளிகள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 42.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்ஷவர்தன், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரபல நடிகை டாப்சி பன்னு உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர்.
110 வயது பெண் வாக்காளரான காளிதாரா மண்டல், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வாக்களித்தார். இதேபோல மணமகன் ஒருவர், திருமணம் முடித்த கையோடு வந்து வாக்களித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் டெல்லி லோதி எஸ்டேட் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களது மகனும், முதல் முறை வாக்காளருமான ரைஹான் ராஜீவ் வதேராவும் ஜனநாயகக் கடமையாற்றினார்.
Comments